×

13 ஆண்டு ஒப்பந்த வேலையில் ரூ.7 கோடி சொத்து குவித்த பலே பெண் இன்ஜினியர்: மாத சம்பளம் ரூ.30 ஆயிரம், டிவி ரூ.30 லட்சம், பிரமாண்ட பங்களா

போபால்: மபி மாநிலத்தில் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் 13 ஆண்டுகள் இன்ஜினியராக வேலை பார்த்த இளம்பெண் ரூ.7 கோடி சொத்து குவித்தது மலைக்க வைத்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் போலீஸ் வீட்டுவசதிவாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் 13 ஆண்டுகள் உதவி இன்ஜினியராக வேலை பார்த்து வருபவர் ஹேமா மீனா(வயது 34). இவரது மாத சம்பளம் ரூ.30 ஆயிரம். ஆனால் அவர் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து நேற்று மபி லோக்ஆயுக்தா போலீசார் ஹேமா மீனாவுக்கு சொந்தமான 3 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அவர் ரூ.7 கோடிக்கும் மேல் சொத்து வாங்கி குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக போபால் பில்கிரியா பகுதியில் மீனாவுக்கு சொந்தமான பிரமாண்ட பண்ணை வீட்டில் நேற்று அதிகாலை 1 மணிக்கு உள்ளே நுழைந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து விட்டனர். சுமார் 20 ஆயிரம் சதுர அடி நிலத்தில் 10 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட பங்களா கட்டப்பட்டு இருந்தது. அங்கு 30 நாட்டு நாய்கள் உள்பட 65 நாய்கள் வளர்க்கப்பட்டு வந்தன. மேலும் கிர் வகை பசுக்கள் உள்பட சுமார் 80 பசுக்கள் அங்கு இருந்தன. 20 கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. வீட்டில் இருந்த டிவி விலை ரூ.30 லட்சம். மேலும் வீட்டு ஊழியர்களுடன் அவர் வாக்கி டாக்கியில் பேசி வந்தது தெரிய வந்தது. அங்கு ஜாமர் ஒன்றும் வீட்டு சுவரில் பொருத்தப்பட்டு இருந்தது. அந்த வீடு ஹேமா மீனாவின் தந்தை ராம்ஸ்வரூப் மீனா பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

மேலும் ரூ.10 லட்சம் நகைகள், ரூ.77 ஆயிரம் ரொக்கப்பணம்,ரெய்சன், விதிஷா மாவட்டங்களில் நிலம் வாங்கி குவித்ததற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுபற்றி ஹேமா மீனாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ள லோக்ஆயுக்தா போலீசார், உரிய பதில் இல்லை என்றால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு எடுத்துள்ளனர்.

The post 13 ஆண்டு ஒப்பந்த வேலையில் ரூ.7 கோடி சொத்து குவித்த பலே பெண் இன்ஜினியர்: மாத சம்பளம் ரூ.30 ஆயிரம், டிவி ரூ.30 லட்சம், பிரமாண்ட பங்களா appeared first on Dinakaran.

Tags : Bale ,Bhopal ,Mabi ,
× RELATED மபியில் இரவு 10 மணி தாண்டியதால் சவுகான்...